‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

“அயர்தல் என்றும் அணுகாதெனை உயர்தல் ஒன்றே ஒன்றும்” விடாதீர் சுதேசியம் – வ.உ. சிதம்பரனார்

வ.உ.சி (1872-1936)

(வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்)

வ.உ.சி 5.9.1872 இல் பிறந்தார்; 18.11.1936 இல் மறைந்தார். இவரது வாழ்க்கையைக் கீழ்க்காணும் கால வரிசையில் அறிந்துகொள்வோம்,

1894-1907

1894இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். வழக்கறிஞர் பணிக்காகத் தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்தார். 1905ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கினார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1907 இல் சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். தூத்துக்குடியின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நெருங்கிய உறவு கொண்டு, களத்தில் போராடும் வழக்கறிஞராக வாழ்ந்தார்.

1908-1912

1908 ஆம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி கோரல் மில் ஆலைப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். இந்திய அளவில் நடந்த முதல் ஆலைத் தொழிலாளார் போராட்டம் இது. இந்திய விடுதலைப் போராட்ட வீரரான விபின் சந்திரபால் விடுதலையை முன்னிட்டுப் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். சுப்பிரமணிய சிவாவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிகழ்வை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானிய அரசு 1908ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் வ.உ.சியையும் சிவாவையும் கைதுசெய்தது. சிறை வாழ்க்கை தொடங்கியது. இருவரும் கைதுசெய்யப்பட்ட மறுநாள் பொதுமக்கள் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டம் திருநெல்வேலிக் கலகம் என்று அழைக்கப்படுகிறது.

வ.உ.சி., சிறையில் வாழ்ந்தபோது, ஜேம்ஸ் ஆலன் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தார்; திருக்குறளுக்கு உரை எழுதினார். கொடுமையான சிறைத்தண்டனைக் காலத்தை நூல்களை வாசித்தே கழித்தார்.

1913-1936

இந்தக் காலத்தில் தாம் மொழிபெயர்த்த நூல்களை அச்சிட்டுக் கொண்டுவந்தார். மணக்குடவர் திருக்குறள் அறத்துப்பாலைப் பதிப்பித்தார். மெய்யறம் என்ற நூலை எழுதி அச்சிட்டார். காங்கிரஸ் அமைப்பின் மிதவாத அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. திரு.வி.க. போன்றவர்கள் நடத்திய சென்னை மாகாண சங்கத்தில் பணியாற்றினார்.

தமிழக அரசியல் சூழலில், வகுப்புரிமையை முன்னிறுத்தி, பெரியார் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தை நடத்தினார். அவ்வியக்கத்தின் வகுப்புரிமைக் கொள்கையை வ.உ.சி. ஆதரித்தார். இவ்வகையில், தமிழக சமூகநீதிப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். பெரியார் நடத்திய பார்ப்பனர் அல்லாதார் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார்.

தம் இறுதிக் காலத்தில், தொல்காப்பிய இளம்பூரணர் உரையையும், திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையையும் அச்சிடும் பணிகளில் அக்கறை செலுத்தினார். 1935 இல் திருக்குறள் அறத்துப்பால் மட்டும் வெளிவந்தது. அவரது முழு உரை 2008இல்தான் அச்சிடப்பட்டது. 1936 ஆம் ஆண்டு அவரது வாழ்வு நிறைவுற்றது.

இந்த இணையப் பக்கத்தில் வ.உ.சி அவர்களின் அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டுள்ளன. புத்தகத்தைத் தேர்வு செய்வதிலும், இணையப் பக்கத்தை உருவாக்குவதிலும் துணையாக இருந்த முனைவர் வீ.அரசு, மேனாள் தமிழ்ப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இணையப் பக்கத்தை மேலும் மேலும் இணைப்புகளைச் சேர்த்து வளப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வ.உ.சி. நூல்கள்

கையெழுத்துப்பிரதிகள்

Home
Home