tva-logo

அரிட்டாபட்டி

அமைவிடம் - அரிட்டாபட்டி
ஊர் - அரிட்டாபட்டி
வட்டம் - மேலூர்
மாவட்டம் - மதுரை
காலம் / ஆட்சியாளர் - பாண்டியர் - சிழிவன் அதினன் வெளியன்
வரலாற்றுஆண்டு் - கி.மு.2-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 264 -1978-79, Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் - இம்மலையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டு முதல் கல்வெட்டாகும். இக்கல்வெட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர் கே.வி.இராமனும், பேராசிரியர் எ.சுப்பராயலுவும் 1971-இல் கண்டறிந்தனர். முதன் முதலாக இந்திய வரலாற்றுக் கழகத்தின் 49-ஆம் பருவ இதழில் 1971-இல் வெளியிட்டனர். இக்கல்வெட்டு கள ஆய்வுகளில் திருத்தமான பாடம் வாசிக்கப்பட்டு ஐ.மகாதேவன் நூலில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத் தளத்தை கொட்டுபித்தான் அதாவது கொட்டுவித்தான் என்பது கல்லில் கொட்டி செய்யப்படும் பணியைக் குறிக்கிறது. நெல்வேலி என்பது இன்றைய திருநெல்வேலியின் தொன்மைப் பெயராக இருக்கலாம். சிழிவன் என்பது செழியன் என்னும் பாண்டியர் குடிப்பெயராகும். அதினன் வெளியன் என்பது கொடையாளியின் இயற்பெயர். அதினன் என்னும பெயர் ஆண்டிப்பட்டி புதையலில் கிடைத்த ஈயக் காசுகளிலும் இடம்பெற்றுள்ளது. வெளியன் என்னும் சங்க இலக்கியத்தில் தித்தன் வெளியன் என்னும் பெயராக இடம் பெறுகிறது. வெளியன் என்பதை ஒளித்தன்மை உடையவன் என்று பொருள் கொள்ளலாம். வெள்-வெளிச்சம்-ஒளி இவை ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். வெள் என்பதன் நீட்டலே வேள் என்பது ஆய்வு முடிபாகும். எனவே நெல்வேலியை ஆண்ட அதினன் என்னும் வேள் அமைத்து வைத்த கற்படுக்கையாக இதனைக் கருதலாம். இவ்வேள் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
மொழியும் எழுத்தும் - தமிழ் - பண்டையத் தமிழி (தமிழ்-பிராமி)