“வாராது வந்த மாமணி“

இராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919)

இயற்றிய

“கருணாமிர்த சாகரம்” (1917–2017) - நூற்றாண்டு விழா

தமிழுக்குக் கிடைத்த ‘வாராது வந்த மாமணி’ இராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919) அவர்கள்.

ஆசிரியர், சித்த மருத்துவர், நிழற்பட நிபுணர், அச்சுக்கலை வல்லுநர், கணியர், வேளாண் அறிஞர், கிறித்துவ இறையியலாளர், இசைத்தமிழ் வல்லுநர் என பண்டிதர் அவர்கள் பன்முகங்கள் கொண்டவர்; இருப்பினும் அவர்களின் பணிகளிலே தலையாய பணியாய் விளங்குவது கருணாமிர்த சாகரம் என்னும் ஒப்பற்ற இசைத்தமிழ் நூலை எழுதியதே ஆகும். 1917ஆம் ஆண்டு, இந்நூலின் முதல் தொகுதி வெளியானது. இந்நூலின் இரண்டாம் தொகுதியில் முதல் 3 பகுதிகளையும் எழுதிமுடித்து, அவற்றில் 256 ஆம் பக்கம் வரை அச்சடித்த பின்பு 1919இல் இயற்கை எய்தினார். பின்பு அவரது மகளார் மரகதவல்லி துரைப்பாண்டியன். பண்டிதர் வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு நான்காவது பகுதியை எழுதிமுடித்தார். இந்த இரண்டாவது தொகுதி 1946ஆம் ஆண்டு வெளிவந்தது.

கருணாமிர்த சாகரம் என்னும் பெருநூலைத் தவிர கருணாமிர்த சாகரத் திரட்டு (1907) நன்மறை காட்டும் நன்னெறி, முத்துச்சோளம் பயிர் செய்யும் விதம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அவரின் இசைத்தமிழ்ப் பணிகளைக் கொண்டாடும் முகத்தான், ஆபிரகாம் பண்டிதரின் நூல்களை மட்டுமல்லாது தமிழிசை தொடர்பான அத்தனை நூல்களையும் உங்களுக்கு ஆற்றுப்படுத்த “தமிழிசைப் பெருவாயில்” என்னும் இந்த இணைப்பைச் சொடுக்குக.