அமைவிடம் | - | சிங்கம்பட்டி |
ஊர் | - | சிங்கம்பட்டி |
வட்டம் | - | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | - | திருநெல்வேலி |
வகை | - | அரண்மனை |
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | - | கி.பி. 1100 |
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | - | காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா கோயில் |
பாதுகாக்கும் நிறுவனம் | - | சிங்கம்பட்டி ஜமீன் |
விளக்கம் | - | விஜயநகரப் பேரரசின் காலத்தில் விஜயநகர மன்னர்களின் ஆளும் பிரதிநிதிகளாக மதுரைக்கு வந்த நாகமநாயக்கரும், அவரது புதல்வர் விஸ்வநாத நாயக்கரும் பிதாமகரான அரியநாயக முதலியார் தலைமையில் முன்பிருந்த பாண்டிய மன்னர் கீழ் இருந்த குறுநில ஆட்சிப் பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றி அமைத்தனர். அப்போது பிறந்த பாளையம்தான் சிங்கம்பட்டி. விஸ்வநாதநாயக்கர் மதுரையைச் சுற்றி ஒரு பிரமாண்டமான கோட்டையை நிர்மாணித்தார். அதில் 72 கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையின் கீழ் வைக்கப்பட்டன. சிங்கம்பட்டி பாளையக்காரரின் இணையற்ற தீரபராக்கிரமத்தை கண்ட விஸ்வநாதநாயக்கர் அவரை தென்நாட்டுப்புலி என பாராட்டினார். பின்பு 1802-ம் ஆண்டு சென்னை ராஜ்ய கவர்னர் ராபர்ட் கிளைவ், பாளையங்கள் அனைத்தையும் ஜமீன்களாக மாற்றி அமைத்தார். வனப்பிரதேசத்தில் உள்ள பாணத்தீர்த்த அருவிக்கு சிங்கம்பட்டி சமஸ்தான குலகுரு சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நரசிம்ம பாரதி தீர்த்தமாட வந்திருந்தபோது, தீர்த்தபதி என்னும் பட்டத்தை சிங்கம்பட்டி குறுநில மன்னருக்கு வழங்கினார். சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர். தயாளகுணம் கொண்ட இவர் அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரால் தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறது. சிங்கம்பட்டி ஜமீன்தார் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த வழக்கில் பெரும் விரயம் ஏற்பட்டது. அது ஜமீன் வருமானங்களைப் பாதித்தது. கொண்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவானது. சிங்கம்பட்டியின் 31-வது பட்டம் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. இவருக்கு இப்போது வயது 80. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார். காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார். சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர். இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 900 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார். ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன. |
ஒளிப்படம் எடுத்தவர் | - | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றில் கலப்பதற்கு இரண்டு மைலுக்கு மேலே இருக்கும் ஊர் சிங்கம்பட்டி. இப்பகுதியில் ஆண்டு வந்த விக்கிரமசிங்கன் என்ற குறுநில மன்னருடைய பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் சிங்கம்பட்டி. இந்த பரம்பரையில் வாழ்ந்த மன்னர்கள் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள். இவ்வூரை தலைமை ஊராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களால் அமைக்கப்பட்டது மாகதேவர்-அகஸ்தீசுவரர் ஆலயம் ஆகும். பாணதீர்த்தம் மற்றும் கல்யாண தீர்த்தம் போன்ற தீர்த்தம் உள்ள இடங்கள் இந்த குறுநில மன்னர்களுக்கு சொந்தமானது. தீர்த்தத்திற்கு அதிபதியானதால் தான் சிங்கம்பட்டி ஜமீன்களுக்கு தீர்த்தபதி என்ற பெயர் வந்துள்ளது. இவர்கள் இடத்திற்குள் தான் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. |