கலைஞர் நேர்காணல் - கல்கி, ஜூன் 1998


கல்கி        :  

உங்களுடைய எத்தனையாவது பிறந்த நாள் பிரபலமாக, பெரிய அளவில் முதன் முதலாக கொண்டாடப்பட்டது? அப்போது யாரெல்லாம் உங்களை வாழ்த்தினார்கள்?

கலைஞர்   :  

என்னுடைய 44வது பிறந்தநாளின் போதுதான் சென்னையிலுள்ள கழகத் தோழர்கள். தொண்டர்கள் எல்லாம் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நான் சென்னையிலேயே இல்லாமல் மன்னைக்கு ஓடி விட்டேன்!

கல்கி        :  

ஏன்?

கலைஞர்   :  

பிறந்த நாள் கொண்டாடப்படக்கூடாது. என்றுதான். ஆனாலும் கலைவாணர் அரங்கத்தில் அண்ணா தலைமையில் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நான் இல்லாமலேயே கொண்டாடப்பட்டது! அந்த விழாவில் அண்ணா சொன்னதுதான், 'தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி' என்பது. அண்ணாவின் அந்த வாழ்த்தைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.

கல்கி        :  

இன்றளவும் மறக்க முடியாத பள்ளிக்கூட அனுபவம் ஒன்றைச் சொல்லுங்களேன்!

கலைஞர்   :  

நான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததே பெரிய அனுபவம்தான். திருக்குவளை கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும்போது எனக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியர், என்னை எட்டாம் வகுப்பில் சேர்ப்பதாகச் சொல்லி திருவாரூருக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ஆனாலும் நான் ஐந்தாம் வகுப்பில்தான் சேர்க்கப்பட்டேன். அதில் சேருவதற்குப் போதுமான அளவு மதிப்பெண்ணைக் கூட நான் பெறவில்லை என்பதால் அதில் சேர்ந்ததும் ஒரு கதை. அப்போது கஸ்தூரிரங்க ஐயங்கார் என்பவர் ஹெட் மாஸ்டர். அவர் ரூமுக்கு ஓடிப் போய், 'என்னைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா, இல்லை எதிரில் உள்ள கமலாலயம் குளத்தில் போய் விழவா? என்று சொல்லி விட்டு ஓடி வந்தேன். ஹெட் மாஸ்டரே ஓடிவந்து என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் எனக்கு ஐந்தாம் வகுப்பில் அட்மிஷன் கொடுத்தார்.

கல்கி        :  

மறக்க முடியாத உங்கள் இளம் வயது நண்பர் யார்?

கலைஞர்   :  

திருவாரூர் தென்னன்தான்.

கல்கி        :  

உங்களைக் கட்சியின் தலைவராகவோ அல்லது முதல்வராகவோ நினைத்துப் பழகாமல், மு. கருணாதிதி என்கிற அளவில் மட்டுமே பழகிக் கொண்டிருக்கிற நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?

கலைஞர்   :  

சி. டி. மூர்த்தி என்பவர், அவரை சி.டி.எம். என்று அழைப்போம். சென்னையில்தான் இருக்கிறார்.

கல்கி        :  

எல்லோருக்குமே 'வாடா போடா" என்று அழைக்கிற அளவுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.அப்படி உங்களை அழைக்கிற அளவுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?.

கலைஞர்   :  

சி.டி. மூர்த்திதான், அவரை நான் 'வாங்க, போங்க' என்றுதான் சொல்லுவேன், என்றாலும் அவர் என்னை 'வா, போ' என்றுதான் அழைப்பார்.

கல்கி        :  

நீங்கள் முதன் முதலில் சந்தித்த திராவிட இயக்கப் பிரமுகர் அல்லது தலைவர் யார்?

கலைஞர்   :  

பட்டுக்கோட்டை அழகிரிசாமி. 1938- இந்தி எதிர்ப்புப் போராட்ட நேரம். அப்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும்.

கல்கி        :  

கல்லூரியில் படிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?

கலைஞர்   :  

அரசியல் துறையில் நான் நம்பிய நண்பர்களால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களைச் சந்திக்கும்பொழுது, 'ஐயோ கல்லூரியில் படித்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோமே' என்று நினைத்திருக்கிறேன். கல்லூரியில் படித் திருந்தால் ஏதாவதொரு வேலைக்கல்லவா போயிருப்பேன்!

கல்கி        :  

பெரியாரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த அம்சம் என்ன?

கலைஞர்   :  

அவருடைய அயராத உழைப்புத்தான்.

கல்கி        :  

உங்களைப் பற்றிப் பிறர் குறிப்பிடும்போதும் உங்களுடைய உழைப்பைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர்   :  

பெரியாரின் மாணவன்தானே நான்!

கல்கி        :  

பெரியாரின் அயராத உழைப்புக்கு ஓர் உதாரணம் சொல்லுங்களேன்!

கலைஞர்   :  

பெரியார் அவர்கள் சிறுநீரக நோய்க்கு ஆட் பட்டிருந்தார். ஒரு டியூபின் மூலமாகத்தான் அவரது சிறுநீர் வெளியேற்றப்படும். அதற்காக எப்போதும் அவருடன் ஒரு வாளி இருக்கும். உட்கார்ந்து பேசும்போதும் அந்த வாளி கூடவே இருக்கும். இந்த நிலையிலும் அவர், தமது சுற்றுப் பயணங்களைக் குறைத்துக் கொண்டது கிடையாது. அதனால்தான் அவர் மறைந்த போது நான், 'பெரியார் தமது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டார்' என்று சொன்னேன். அப்படியோர் அயராத உழைப்பு அவருடையது.

கல்கி        :  

அண்ணாவிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம்?

கலைஞர்   :  

அவரது எளிமை. அவர், தாம் போட்டுக் கொண்டிருக்கிற சொக்காயைப் பற்றிக் கூட கவலைப்படமாட்டார். அதில் எத்தனை பொத்தான்கள் இருக்கிறதென்பது கூட அவருக்குத் தெரியாது, பல நேரங்களில் பொத்தான்கள் ஒன்றுக்கொன்று மாறுதலாகப் போடப்பட்டிருக்கும். சில நேரங்களில் நாங்கள் இதைப் பொதுக் கூட்ட மேடைகளில் பார்த்து விட்டுச் சொன்னாலும் கவலைப்பட மாட்டார். கட்டாயப்படுத்தித்தான் அவரை தலை வாரிக் கொள்ளச் செய்வோம். ஷேவ் செய்து கொள்வது பற்றியும் கவலைப்பட மாட்டார். அவர் முதல்வரான பிறகுதான் தொடர்ந்து ஷேவ் செய்து கொண்டார். அதோ... ஹாரி மில்லர் எடுத்த அண்ணாவின் படத்தைப் பாருங்களேன்... (கலைஞரது அறையில் உள்ள ஷேவ் செய்யப்படாத, அண்ணா படத்தைக் காட்டுகிறார்)

கல்கி        :  

உங்கள் சமகாலத்திய இயக்கத் தோழர்களில் யாரைக் கண்டு பெருமைப்படுகிறீர்கள்? யாரைக் கண்டு வருத்தப்படுகிறீர்கள்?

கலைஞர்   :  

பேராசிரியர் அன்பழகனைக் கண்டு பெருமைப்படுகிறேன். நாவலர் நெடுஞ்செழியனைக் கண்டு வருத்தப்படுகிறேன். ஏனெனில் நாவலர் இலக்கியம் படித்தவர். சங்க இலக்கியங்களையெல்லாம் ஆராய்ந்தவர். நல்ல பேச்சாளர், அண்ணாவே அவரைப் பார்த்து, 'தம்பி வா! தலைமை ஏற்க வா! ஆணை கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம் வா! என்று அழைத்தார். அப்படிப்பட்ட நாவவர் இந்த நிலைமைக்குப் போய் விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு.

கல்கி        :  

பேராசிரியரைக் கண்டு நீங்கள் பெருமைப்படுவதற்கான விஷயம் என்ன?

கலைஞர்   :  

அண்ணா சென்னைக்கு வந்தால் பெரும்பாலும் பேராசிரியர் வீட்டில்தான் தங்குவார். நான், நாவலர், சம்பத் எல்லோரும் அங்குதான் அண்ணாவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். கட்சிக்கு எத்தனையோ சோதனைகள் வந்தபோதும் கூட கட்சி, கொள்கை என்பதில் சிறிதளவும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். எம்.ஜி.ஆர். காலத்தில் அவரை அழைத்தார்கள். அவர் விரும்பியிருந்தால் அவர் அங்கு சென்று பதவி வகித்திருக்கலாம். ஆனாலும் இம்மியும் மாறாமல் இருந்தார். என்னோடு கூட அவருக்குச் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் அவர் எனக்காக அல்லாமல் கட்சிக்காக என்னோடு இருக்கிறார். அதனால் தான் அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

கல்கி        :  

எப்போதாவது உங்கள் குடும்பத்தாரோடு ஷாப்பிங் போயிருக்கிறீர்களா?

கலைஞர்   :  

இப்படியொரு விஷயம் நடக்கவேயில்லை! (பலமாகச் சிரிக்கிறார்!)

கல்கி        :  

இப்போது சாத்தியமில்லைதான். ஆனாலும் உங்களுக்குக் கல்யாணமான புதிதில் கூடவா அப்படிப் போனதில்லை?

கலைஞர்   :  

அப்போதும் நான் போனது கிடையாது.

கல்கி        :  

உங்கள் குடும்பத்தாருக்குப் பிடித்தமான உடைகளை நீங்களாகவே கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?

கலைஞர்   :  

டெல்லி போன்ற வெளியூர்களுக்குச் செல்லும் போதும் வெளிநாடுகளுக்குச் செல்கிற போதும், குடும்பத்தாருக்குப் பிடித்தமான உடைகள் பற்றி அவர்களிடமே கேட்டறிந்து, அதுவும் நான் போய் வாங்குவதில்லை; வேறு யாரையாவது போய் வாங்கி வரச் செய்து கொடுப்பதுண்டு.

கல்கி        :  

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்ததுண்டா?

கலைஞர்   :  

முரசொலி மாறன் குழந்தையாக இருந்தபோது சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை எட்டாவதில் கொண்டு போய்ச் சோர்ப்பதாகச் சொல்லி ஐந்தாவதில் கூட சேர்ப்பதற்குச் சிரமம் ஏற்பட்டது. மாறனைத் திருக்குவளையில் மூன்றாவது வரை படிக்க வைத்து, திருவாரூரில் கொண்டு போய் ஐந்தாவதில் சேர்த்து விட்டேன். அந்த அளவுக்கு நான் நன்றாகச் சொல்லிக் கொடுத்தேன் மாறனுக்கு,

கல்கி        :  

நீங்கள் ஒரு கெட்டிக்கார ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள்....

கலைஞர்   :  

ஆம்; ஆனால் நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை! (சிரிப்பு).

கல்கி        :  

ஸ்டாலின், அழகிரி போன்றோருக்கெல்லாம் நீங்கள் சொல்வித் தந்ததில்லையா?

கலைஞர்   :  

இல்லை. முரசொலி சொர்ணத்துக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

கல்கி        :  

திரைப்படத் துறையில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்?

கலைஞர்   :  

திரைப்படத்துறையில் நான் நுழைவதற்குக் காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற தபேலா முத்துக்கிருஷ்ணன். திருச்சி வானொலி நிலையத்தில் வேலை பார்த்தார்; சக்தி நாடக சபாவில் இருந்தவர். அடுத்தவர் கவி கா.மு.ஷெரீப், அவர்தாம் எனது மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்து விட்டு, அது பற்றி டி.ஆர். சுந்தரத்திடம் சொல்லி, அதைப் படமாக்கச் செய்தவர். அந்தத் துறையிலுள்ள நீக்குப் போக்குகளை நாள் அறிகிற அளவுக்கு வாய்ப்புத் தந்தவர், டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமி.

கல்கி        :  

எந்தப் படத்தின் வசனத்தை எழுத நீங்கள் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்?

கலைஞர்   :  

எந்தப் படத்துக்குமே நான் நீண்ட நாள் எடுத்துக் கொண்டதில்லை, சில படங்களுக்கு ஒருவார காலத்திலும் எழுதியிருக்கிறேன். இடையில் வேறு வேலைகள் இருக்கிறபோது, ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டும் எழுதியிருக்கிறேன். முதலில் டைரக்டர்களோடு உட்கார்ந்து பேசி, திரைக்கதையை முடிவு செய்து கொண்டு விடுவதால், வசனத்தை மளமள வென்று எழுதி விடுவேன்.

கல்கி        :  

'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்பதால் இந்தக் கேள்வி... அரசியல்வாதி ஜெய லலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?

கலைஞர்   :  

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் போயஸ் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டா என்பது எனக்குத் தெரியாது. (அறையில் வெடிச் சிரிப்புக் கிளம்பி அதிர வைக்கிறது!

கல்கி        :  

உங்களுடைய முதல் சம்பாத்தியத்தை எப்படிச் செலவழித்தீர்கள்?

கலைஞர்   :  

ஈரோட்டிலிருந்த பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் நான் பெற்ற சம்பளம்தான் எனது முதல் சம்பாத்தியம், மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். அதில் சாப்பாட்டுச் செலவுக்கும் சினிமா மாதிரியான பொழுது போக்குச் செலவுக்கும் போக, மீதியுள்ள ஐந்து அல்லது பத்து ரூபாய் அளவுக்கு திருவாரூரிலிருந்த எனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன்,

கல்கி        :  

அண்ணாவிடமிருந்து பாராட்டுதல்களைப் பெற்றது போல் எப்போதாவது அவருடைய கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறீர்களா?

கலைஞர்   :  

அண்ணாவின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனாலும் அது செல்லக் கோபமாக இருக்குமே தவிர, சீற்றமாக இருந்ததில்லை. அண்ணா சொல்லியும் கேட்காமல் 1959-ம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிகமான வேட்பாளர்களை நான் நிறுத்தி விட்டேன். அப்போது அண்ணா 'இத்தனை பேரை நிறுத்தியிருக்கியே, ஜெயிக்க முடியுமாய்யா?" என்று கேட்டார். நான், 'ஜெயிக்க முடியும்!" என்றேன். 'முடியாது!" என்றார். அவர். 'நிச்சயமாக ஜெயிப்போம். கார்ப்ப ரேஷனை நாம் பிடிப்போம்' என்றேன். 'என்ன பந்தயம் கட்றே?" என்றார், நான் 'எந்தப் பந்தயத்துக்கும் தயாராயிருக்கிறேன்' என்றேன். பட்டியலையே தூக்கிப் போட்டு விட்டு, 'ஜெயித்தால் நான் உனக்கு ஒரு மோதிரம் பண்ணிப் போடறேன்!" என்றார். அந்தப் பந்தயத்தில் பண்ணிப் போட்டது தான் இந்த மோதிரம். (விரலை உயர்த்திக் காட்டுகிறார்).

கல்கி        :  

அண்ணா கொடுத்த இந்த மோதிரத்தை நீங்கள் எப்போதும் அணிந்திருக்கிறீர்களே, இது ஒரு சென்டிமெண்ட்டா?

கலைஞர்   :  

சென்டிமெண்ட் என்று சொல்ல முடியாது. அன்பின் அடையாளம், இது எனது கடைசிப் பயணம் வரையில் என் கை விரலில்தான் இருக்கும்.

கல்கி        :  

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களைத் 'தலைவர்' என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அப்போது உங்கள் மனோநிலை எப்படியிருக்கும்?

கலைஞர்   :  

என்னுடைய சிஸ்டரெல்லாம் 'தம்பி' என்று தானே அழைக்கிறார்கள்.

கல்கி        :  

ஸ்டாலினெல்லாம் உங்களைத் தலைவர் என்றுதான குறிப்பிடுகிறார்.

கலைஞர்   :  

பையன்கள் அப்படிக் குறிப்பிடலாம். குடும்பத்தில் வேறு சிலர் அப்படிக் குறிப்பிட்டாலும் கழகம் என்கிற குடும்பத்தில் அவர்களும் தொண்டர்கள் தானே! அதனால்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

கல்கி        :  

'மனைவி சொல்லே மந்திரம்- சரி. தானா?

கலைஞர்   :  

என் அளவில் இதில் ஒரு திருத்தம் இருக்கிறது. 'மனைவிகள்' என்று சொல்லணும்! (சிரிப்பு). வீனாகச் சண்டையை மூட்டி விடாதீர்கள்! (சிரிப்பு). 'மனைவி சொல்லே மந்திரம்' என்பது மனைவியை ஏமாற்றும் ஒரு தந்திரம். அவ்வளவுதான்! (மீண்டும் சிரிப்பு)

கல்கி        :  

குடும்பத்தை நடத்தும் பொறுப்பில் உங்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?

கலைஞர்   :  

எந்த விதமான பொறுப்பான பங்கும் என்றைக்குமே இருந்ததில்லை. வீட்டிலுள்ளவர்கள்தான் குடும்பத்தை நடத்துகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கல்கி        :  

முக்கியமான விஷயங்களில் யார் முடிவெடுப்பார்கள்?

கலைஞர்   :  

திருமணம் போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதுதான் என்னுடைய பொறுப்பாக இருக்கும். ஏனென்றால், என்னுடைய குடும்பத்தில் காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அதற்கான முடிவுகளை நான்தான் எடுக்க வேண்டியிருந்திருக்கிறது.

கல்கி        :  

நீங்கள் காதலுக்குச் சாதகமாகத் தான் இருப்பீர்கள், இல்லையா?

கலைஞர்   :  

நிச்சயமாக.

கல்கி        :  

உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? எப்போதாவது சமைத்திருக்கிறீர்களா? என்ன சமைத்திர்கள்?

கலைஞர்   :  

சட்டசபையில் சொல்கிற மாதிரி சொல்கிறேன்: முதல் கேள்விக்குப் பதில்: தெரியாது; அதைத் தொடர்ந்து வரும் கேள்வி 'அ'வுக்கு: 'இல்லை'; 'ஆ'வுக்கு: 'இந்தக் கேள்வியே எழவில்லை."

கல்கி        :  

'கொழுக்கட்டை சாப்பிடத்தயார்' என்று சொல்லியிருக்கிறீர்களே, நிஜமாகவே கொழுக்கட்டையின் சுவை உங்களுக்குப் பிடிக்குமா?

கலைஞர்   :  

கொழுக்கட்டை என்றால் வெறும் கொழுக்கட்டை அல்ல; உள்ளே இனிப்பான பூரணம் உள்ள கொழுக்கட்டையின் சுவை உள்ளபடியே எனக்குப் பிடிக்கும். சொல்லப் போனால் பலகாரங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது. பூரணத்தோடு கூடிய மோதகம்-கொழுக்கட்டைதான்!

கல்கி        :  

அளவுக்கு மீறி ஒரு சிலர் உங்களைப் புகழும்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

கலைஞர்   :  

நான் ரொம்பவும் வெட்கப்படுவேன். சில நேரங்களில் சந்தேகப்படுவேன், அவர்களைப் பற்றி!

கல்கி        :  

மனம் சோர்வடையும் போது உங்களை நீங்களே எப்படி உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள்?

கலைஞர்   :  

என்னை விட அதிக கஷ்டப்படுபவர்களை நினைத்து, அவர்களெல்லாம் எப்படித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, என்னை உற்சாகப்படுத்திக் கொள்வேன்.

கல்கி        :  

நீங்கள் ரொம்பவும் சோர்ந்து போன ஒரு விஷயம் பற்றிச் சொல்லுங்களேன்!

கலைஞர்   :  

எனது அறுபதாண்டு காலப் பொது வாழ்க்கையில் அடிக்கடி சோர்ந்து போகக்கூடிய நிகழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. எனவே, ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

கல்கி        :  

பெண்ணுரிமை பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய பெண்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்!

கலைஞர்   :  

ஓர் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவை அத்தனையும் ஒரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை. ஆனால், நம்முடைய பண்பாட்டுக்கு ஏற்ற வகையிலே ஓர் ஆணுக்கு இருக்கின்ற உரிமைகளின் அளவு. பெண்களுக்கு இருக்க வேண்டும். அது நமது பண்பாட்டை மீறியதாக ஆகிவிடக் கூடாது. பெண்ணுரிமை என்ற பெயரால் பண்பாடுகளைப் போட்டு மிதிக்கின்ற அளவுக்குத் தீவிர உரிமைகள் பேசுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

கல்கி        :  

உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகர் யார்?"

கலைஞர்   :  

ஆண் என்றால் சிதம்பரம் ஜெயராமன், பெண் என்றால் திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி,

கல்கி        :  

நீங்கள் பாடுவீர்களா' மேடையில் இல்லாவிட்டாலும் தனிமையிலாவது பாடுவீர்களா?

கலைஞர்   :  

எனக்குப் பாட்டுக் கேட்ட பதிலே மிகுந்த ஆர்வம் உண்டு. தனிமையில், யாரும் இல்லாத நேரத்தில் பாடல்களை முனுமுனுப்பேன். யார் காதிலும் விழும் படி பாடினால், ஒருவேளை அவர்கள் முனுமுனுப்பார்கள்.! சிரிப்பு

கல்கி        :  

என்ன பாடலை முணுமுணுப்பீர்கள்?

கலைஞர்   :  

இந்தப் பாடல் என்று கிடையாது, எந்தப் பாடலை வேண்டுமானாலும் முனுமுனுப்பேன்.

கல்கி        :  

உங்களுடைய மேடைப் பேச்சு எல்லோரையும் கவர்கிறது. உங்களைக் குவர்த்த மேடைப் பேச்சாளர் யார்?

கலைஞர்   :  

அறிஞர் அண்ணா. மூதறிஞர் ராஜாஜி. இருவருமே என்னைக் கவர்ந்தவர்கள்.

கல்கி        :  

ராஜாஜிக்கும் உங்களுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்களேன்!

கலைஞர்   :  

அண்ணாவுக்கும் ராஜாஜிக்கும் தேர்தல் உறவு ஏற்படுவதற்கு நாள் பாலமாக இருந்திருக்கிறேன். சுதந்திர வெள்ளி விழாவின் போது அவருக்குத் தாமிரப்பத்திரம் வந்திருந்தது. அப்போது ராஜாஜி, "எனக்குத் தாமிரப் பத்திரம் வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன். என்னால் வர முடியவில்லை, யாரிடமாவது கொடுத்து அனுப்பி விடுங்கள்!" என்று எனக்கு எழுதினார். அதை நானே எடுத்துக் கொண்டு போய் அவரிடம் தட்டில் வைத்துக் கொடுத்தேன், அவர் எனக்கு மாலை போட்டு வாங்கிக் கொண்டார். 52ல் தி.மு.க.வுக்கும் சுதந்திரா கட்சிக்கும் தேர்தல் உடன்பாடு வரவில்லை அப்போது தஞ்சாவூருக்கு வந்து ராஜாஜி தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, அங்கே என்னை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட கரந்தை சண்முக வடிவேலு. மேடையிலிருந்த ராஜாஜிக்கு ஒரு மாலையைப் போட்டு ஆசீர்வாதம் கேட்டிருக்கிறார். அப்போது ராஜாஜி. 'என் ஆசிர்வாதம் உமக்கு ஆதரவு கருணாநிதிக்கு" என்று சொன்னார். அதெல்லாம் மறக்க முடியாத வாசகங்கள்,

கல்கி        :  

உங்களைப் பற்றி உங்களிடமே வெளிப்படையாக விமாசனம் செய்பவர்கள் இருக்கிறார்களா?

கலைஞர்   :  

இருக்கிறார்கள்.

கல்கி        :  

கட்சியில் இருப்பவர்களா, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களா?

கலைஞர்   :  

என்னுடைய அமைச்சர்களாக இருப்பவர்கள் கூட ஒருசிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்வார்கள் அதற்காக அவர்களிடத்திலே நான் கோபம் கொள்வதில்லை. முரசொலி மாறனும் செய்வார் எல்லோருடைய விமர்சனங்களையும் சிந்தித்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வகையில் வரவேற்பேனேயல்லாமல், புறக்கணிக்க மாட்டேன்.

கல்கி        :  

ஓய்வு கிடைத்தால் நீங்கள் செஸ் விரும்பும் இடம் எது

கலைஞர்   :  

ஓய்வு கிடைக்கும்போது சொல்லுகிறேன்.

கல்கி        :  

தமிழ் தவிர உங்களுக்கு வேறு எந்த மொழி பிடிக்கும்? இந்திய மொழிகளில் கேட்கிறோம்!

கலைஞர்   :  

சுந்தரத் தெலுங்கு,

கல்கி        :  

உங்கள் நினைவாற்றலின் ரகசியம் என்ன?

கலைஞர்   :  

ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் மனத்தில் பதிந்து போகிற அளவுக்கு அதில் ஆழ்ந்து போய் விடுவேன். அதனால்தான் பல காலத்துக்குப் பிறகும் நினைவுக்கு வருகிறது. பொதுவாக நினைவாற்றல் என்பது உடற்கூறு சம்பந்தப்பட்ட விஷயமும்தான். கூடவே நாம் காட்டுகின்ற ஈடுபாடு.

கல்கி        :  

தலைவன், தொண்டன்-உங்கள் விளக்கம் என்ன?

கலைஞர்   :  

தலைவன் தொண்டனாகத் தன்னைக் கருதிக் கொண்டு பணியாற்றினால், தலைவனுக்குரிய சிறப்பைப் பெறுகிறான். தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை.

கல்கி        :  

இன்றைய சினிமாக்கள், பத்திரிகைகள் எல்லாமே பெரும்பாலும் அரசியல் வாதிகளை மக்கள் விரோதிகளாகத்தான் சித்திரிக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மையிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர்   :  

தவறானது. எல்லா அரசியல் வாதிகளுமே மக்கள் விரோதிகளாக இருக்க முடியாது. அப்படிச் சித்திரிக்கின்ற சினிமாக்களில் உள்ள கலைஞர்களே கூட எல்லோரும் நல்லவர்கள் என்று ஏற்றுக் கொண்டுவிட முடியாது. எல்லாவற்றிலும் சில களைகள் இருக்கும். களைகளையே பயிர்களாகச் சித்திரிக்கக் கூடாது என்பது தான் எனது கருத்து.

கல்கி        :  

அக்கால சினிமாக்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. உங்களைப் போன்றவர்களின் பிரவேசத்தால் வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது அண்மைக் காலத்தில் நீங்கள் எழுதிய போது கூட வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்ததாகத் தெரியவில்லையே, ஏன்?

கலைஞர்   :  

வசனங்களுக்கு முக்கியத்துவம் என்பது அந்தந்தக் கதைகளைப் பொறுத்தது. வரலாற்றுக் கதை, மன்னர் காலக் கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதை, சமூகக் கதை, சமூக நிலைகளை விளக்குகின்ற கதை இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறுதான் வசனங்கள் எழுதப்பட வேண்டும் என்பது எனது கொள்கை. ஒருமுறை வசனங்களைப் பற்றி கலைவாணர் ஒரு பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான், எஸ்.டி. சுந்தரம், டி.கே. சண்முகம், எஸ். வி. சகஸ்ரநாமம் இன்னும் சில எழுத்தாளர்களுமாகக் கலந்து கொண்டோம். அதில், இலக்கண சுத்தமான வசனங்கள் கூடாது என்று ஒரு தரப்பு. நான் பேசும் போது, 'ஒரு சமூகக் கதையில், காலையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற கணவனிடம் மனைவி, காப்பி கொண்டு வந்து கொடுக்கும்போது, 'இத்தாங்க, காப்பி சாப்பிடுங்க' என்றுதான் சொல்லுவாள். அதை விட்டு விட்டு, 'அத்தான்! காப்பி சாப்பிடுங்கள்!'; 'சரி கண்ணே! கொண்டு வா!" என்று அவர்களுக்கு உரையாடல் எழுதினால் அது பொருத்தமில்லாதது என்று பேசினேன். அதே நேரத்தில் அதுவொரு வரலாற்றுப் படமாக இருக்கிற போது... எதிரி கோட்டையை நோக்கி வருகிறான் மன்னன் அந்தப்புரத்தில் மகாராணியோடு உல்லாசமாக இருக்கிறான். அங்கே ஓடி வருகிற காவலன் கதவைத் தட்டி 'மன்னா! மாற்றான் படையெடுத்து வருகிறான்; நமது கோட்டையை நோக்கி வந்து விட்டார்கள்!" என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு மன்னன், சமூகக் கதையில் வருகிற மாதிரி, 'அப்படியாடா! தளபதியைக் கூப்பிடுடா" என்று சொல்ல மாட்டான். 'அப்படியா! கூப்பிடு தளபதியை! அணி வகுக்கச் சொல் நம் படைகளை!’ என்று சொன்னால்தான் கம்பீரமாக இருக்க முடியும். என்னுடைய படங்களை எடுத்துக் கொண்டாலும் பராசக்தி ஒரு மாதிரி இருக்கும். மனோகரா வேறு மாதிரி இருக்கும். மலைக்கள்ளன் வசனம் ஒவ்வொரு வரியில்தான் இருக்கும். இருவர் உள்ளம். வசனமும் சின்னச் சின்ன வரிகளில்தான் இருக்கும். அப்போதுதான் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக வசனங்கள் அமையும். அப்படித்தான் நான் அமைத்திருக்கிறேன்.

கல்கி        :  

நீங்கள் விரும்பிப் படிப்பது எது? கவிதையா, சிறுகதையா, நாவலா?

கலைஞர்   :  

அது எழுதிய எழுத்தாளர்களைப் பொறுத்து இருக்கிறது. பல்வேறு நாவல்களுக்கு மத்தியில் கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்தால் - இதை நான், ராஜேந்திரன் இங்கே இருக்கிறார் என்பதற்காகச் சொல்லவில்லை- நான் பொன்னியின் செல்வனைத்தான் எடுத்துப் படிப்பேன். அதே போல், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளைத்தான் எனக்கு முதலில் எடுக்கத் தோன்றும்.

கல்கி        :  

அரசியல் தலைவர் கலைஞருக்கு ஒரு வாக்காளர் மு. கருணாநிதி என்கிற முறையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கலைஞர்   :  

விட்டுக் கொடுக்க வேண்டியவற்றுக்கு விட்டுக் கொடுத்து, விடாப்பிடியாக இருக்க வேண்டிய விஷயங்களுக்கு விடாப்பிடியாக இருந்து, எந்தச் சூழலிலும் தன்னை இளக்கிக் கொண்டு மக்களுக்காகப் பணிபுரிவதுதான் மகேசனுக்கு ஆற்றுகின்ற தொண்டு என்கிற முறையில் பாடுபடுகின்ற அரசியல் தலைவர் கலைஞருக்கு, யாருமே வாக்களிக்காவிட்டாலும் என் ஒரு வாக்கு நிச்சயமாக உண்டு.

கல்கி        :  

அரசியல், இலக்கியத் துறைகளில் பெற்ற நிறைவை ஒரு குடும்பத் தலைவர் என்கிற முறையிலும் பெற்றிருக்கிறீர்களா?

கலைஞர்   :  

குடும்பத் தலைவர் என்கிற முறையில் நிறைவைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அரசியல், இலக்கியத் துறைகளில் கொண்ட ஈடுபாட்டை குடும்பத்தில் தருவதற்கு எனக்கு அவகாசம் இல்லை.

கல்கி        :  

உங்களுக்குக் கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?"

கலைஞர்   :  

'கணமேயுங் காத்தல் அரிது' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே அத்தகைய கோபம்தான் என்னுடைய கோபம். 'குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது' என்கிற குறளுக்குப் பலரும் பலவாறு பொருள் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கோபத்தைத் தாங்க முடியாது என்றுதான் பொருள் சொல்கிறார்கள். ஆனால் நான் எனது திருக்குறள் உரையில், குணக் குன்றுகளாக உயர்த்து நிற்பவர்கள் தங்களுடைய கோபத்தைக் கணநேரம் கூட வைத்துக் கொள்ள முடியாது' என்று எழுதியிருக்கிறேன். அப்படிப்பட்ட கோபம்தான் என்னுடையது.

கல்கி        :  

குறளோவியம், சங்கத் தமிழுக்கு அடுத்து, நீங்கள் தமிழன்னைக்குச் சூட்டப் போகும் ஆபரணம் என்ன?

கலைஞர்   :  

தொல்காப்பியத்துக்கு ஓவியம் தீட்ட நீண்ட நாட்களாக முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். அதுதான் எனது அடுத்த படைப்பாக இருக்கும்.

கல்கி        :  

உங்களுக்கு டிரைவிங் தெரியுமா? எப்போதாவது காரையோ அல்லது வேறு வாகனத்தையோ ஓட்டியிருக்கிறீர்களா?

கலைஞர்   :  

நான் அந்த முயற்சியில் ஈடுபடாதது. மக்கள் மீது எனக்குள்ள அன்பைக் காட்டுகிறது.

கல்கி        :  

சீப்பை உபயோகப்படுத்த முடியவில்லையே என்கிற வருத்தம் உங்களுக்கு உண்டா?

கலைஞர்   :  

இதற்கொரு சிறு சம்பவம் சொல்கிறேன். எனக்கு முதன் முதலில் ஒரு காலணா அளவுக்கு இப்போதைய ஒரு ரூபாய் அளவுக்கு வழுக்கை விழுந்தபோது, அண்ணா அந்த வழுக்கையைத் தொட்டு, 'வழுக்கை விழுது.. தொத்தா கிட்டச் சொல்லு, (தொத்தா என்பவர் அண்ணாவின் சின்னம்மா) பச்சிலை மருந்து கொடுப்பாங்க அதைப் போட்டால் சரியாப் போயிடும்' என்று சொன்னார். 'இப்படியே இருக்கட்டும் அண்ணா!’ என்றேன். ஏனென்று கேட்டார். 'வழுக்கை விழுந்து கொஞ்சம் முதிர்ச்சியடைந்தால் தான் என்னை மதிப்பீங்க. இப்போ என்னை சின்னப் பையனாத்தான் நினைச்சுக்கிட்டிருக்கீங்க!" என்றேன். ஆக, வழுக்கை பற்றி நான் கவலைப்பட்டதேயில்லை. அதை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும் நான் ஈடுபட்டதில்லை இருக்கிறபடி இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

கல்கி        :  

மேடைகளில் கடுமையாகத் தாக்கிப் பேசுகிற அளவுக்கு மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் யாரும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கிறார்களா?

கலைஞர்   :  

நிறைய, ஜி. உமாபதி மேடைகளில் திட்டித்தான் பேசுவார். என்றாலும் தனிப்பட்ட முறையில் அளவு கடந்த அன்பு காட்டுவார். கண்ணதாசன் என்னைக் கடுமையாகத்தான் விமர்சிப்பார். இருந்தாலும் கடைசி வரை நண்பராகத்தான் இருந்தார். எந்தக் கட்சியிலும் இல்லாத ஒரு பழக்கம் அ.தி.மு.க.வில்தான் உண்டு, நேரில் பார்த்துக் கொள்ளும் போது அவர்கள் பேசக் கூட மாட்டார்கள்!