கலைஞர் குறித்து
கலைஞர்: ஒரு சகாப்தம்

நூறாண்டுகளுக்கு முன்னால், காவிரிக்கரையில், திருக்குவளை மண்ணில் உதயமானது அந்த இளஞ்சூரியன். மாணவப் பருவத்திலேயே தன்னைப் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்டார் கலைஞர். பள்ளி நாள்களில் மாணவநேசன் என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார். சமூகநீதிக்கான உரிமைக்குரலை முழங்கும் பத்திரிகையாளராகத் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார்.

தன் பதின் பருவ வயதிலேயே நாடகம் எழுதி இயக்கினார். நாடக எழுத்தாளராக, இயக்குநராக, நடிகராக மட்டுமின்றி திரைப்படத் துறையிலும் தலைசிறந்த வசனகர்த்தாவாக, திரைக்கதை எழுத்தாளராக, பாடலாசிரியராக முத்திரை பதித்தார். கலை இலக்கியங்களின் நோக்கம் பொழுதுபோக்கு அல்ல, சமூக மாற்றமே என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். பள்ளிப் பருவத்தில் மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டம் வாழ்நாள் முழுவதும் சமத்துவத்திற்காகவும், சமூகநீதிக்காகவும், மொழியுரிமைக்காகவும் தொடர்ந்தது. எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடங்கியது அவரது சட்டமன்றப் பயணம். அடுத்து வந்த அறுபதாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அவருடைய கருத்து தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பையேற்றார் முத்தமிழறிஞர் கலைஞர். தந்தை பெரியார் வகுத்துத் தந்த கொள்கையில், பேரறிஞர் அண்ணா அமைத்துத் தந்த அரசியல் பாதையில் லட்சிய நடைபோட்டார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில், சுகாதார மேம்பாட்டில், உட்கட்டமைப்பு உருவாக்கத்தில், தொழில்வளப் பெருக்கத்தில்... எல்லோருக்கும் எல்லாம் என்ற சம வாய்ப்பு வழங்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்.

இருபதாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு... இந்த இரண்டு நூற்றாண்டுகளின் இந்திய வரலாற்றை, கலைஞரின் பெயரின்றி எழுத முடியாது. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் பெயரை இனி வரும் தலைமுறைகளும் நன்றியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் படைப்புகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை மின்னுருவாக்கம் செய்து 'கலைஞர் கருவூலம்' என்ற இணையப்பக்கத்தை உருவாக்கியிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது தமிழ் இணையக் கல்விக்கழகம்.