tva-logo

ஆலகிராமம்

அமைவிடம் - ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோயில்
ஊர் - ஆலகிராமம்
வட்டம் - திண்டிவனம்
மாவட்டம் - விழுப்புரம்
வரலாற்றுஆண்டு் - கி.பி.5-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
சுருக்கம் - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசுவரர், முருகன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலத்தில் உள்ள நீண்ட சதுர பரப்பில் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளது. பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையார், இரண்டு கரங்களைக் கொண்டுள்ளார். வலது கரத்தில் தடியை ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தத்தையும், இடையில் ஆடையும், காலில் தண்டையும், மார்பில் புரிநூலும், மேற்கைகளில் (தோளில்) கடகமும், முன்கையில் காப்பும் கட்டப்பட்டுள்ளன. தலையை அலங்கரிக்கும் மகுடம், பூக்கூடையை கவிழ்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆலகிராம மூத்த பிள்ளையார் அமர்ந்திருக்கும் பீடத்தில் , மூன்று வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த் எழுத்தின் அமைதி, பூலாங்குறிச்சி கல்லெழுத்தின் அமைதிக்கு பின்னும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயிலில் உள்ள கல்லெழுத்து அமைதிக்கு முந்தையதும் ஆகும். அதாவது, கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட "கோழி நினைவு' கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பத்தில் உள்ள கல்லெழுத்து பாடம் "பிரமிறை பன்னூரு சேவிக --------மகன் -------- கிழார் கோன் ----------கொடுவித்து' இந்தக் கல்வெட்டு வாசகம், இந்தப் பிள்ளையாரை செதுக்கிய சிற்பியைப் பற்றிய கருத்தினைக் கூறுகிறது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முந்து தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் ஆலகிராம மூத்த பிள்ளையார் இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய வரவாகும். ஆய்வில் கண்டறியப்பட்ட முந்து தமிழ் வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பமே, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் முதன்மையானதாகும்.
குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
மொழியும் எழுத்தும் - தமிழ் - வட்டெழுத்து